புனித அந்தோனியாரின் சுரூபமும் & பொன்னால் கட்டப்பட்ட தங்க பீடமும்
(Golden Sanctuary)
கி.பி. 1712 ஆம் ஆண்டில் தற்போதுள்ள கோயிலின் தென்புறத்தில் பரந்து விரிந்த விழுதுகளைக் கொண்ட பெரிய ஆலமரம் இருந்தது. வீரமாமுனிவர் கிறிஸ்துவத்தைப் போதித்து வரும் காலத்தில் மறவநாட்டிலிருந்து தஞ்சைக்கு இவ்வழியாக போகும்பொழுது நிழலுக்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் இவ்வாலமரத்தின் அடியில் ஓய்வெடுத்தார் என்றும் அப்பொழுது புனித அந்தோணியார் சுரூபத்தை வைத்துவிட்டுப் போனதாக இப்பகுதி மக்களால் இன்றும் பாரம்பரிய செவிவழி செய்தியாக கூறப்படுகின்றது.
சுரூபம் வெளிப்பட்ட வரலாறும் கோயிலின் தோற்றமும்:
இவ்வாறு வீரமாமுனிவர் வைத்துவிட்டுச் சென்ற வல்லமைமிக்க புதுமைவாய்ந்த புனித அந்தோணியார் சுரூபம் வெளிப்பட்டதைப் இப்பகுதி மக்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். ஆலமரத்தைச் சுற்றிலும் இருந்த அடர்ந்த காட்டை அழித்துச் சுத்தம் செய்யும்போது இந்தச் சுரூபம் கண்டெடுக்கப்பட்டதாகவும், நோயுற்றப் பலரும் இவ்விடத்தில் புனித அந்தோணியாரிடத்தில் செபித்ததால் குணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு குணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு குணம் பெற்றோரின் கனவில் புனித அந்தோணியார் தோன்றி ஒரு கோவில் கட்டி வழிபடுமாறு கூறியதாகவும், எனவே எல்லாரும் சேர்ந்து ஆலமரத்தின் கீழ் ஒரு குடிசைக் கோவிலைக் கட்டி அங்குப் புனித அந்தோணியார் சுரூபத்தை வைத்து வணங்கத் தொடங்கினார்கள். இதுபோன்ற பல புதுமைகளைக் கண்ட, கேட்ட மக்கள் நாளுக்கு நாள் புனித அந்தோணியார் பக்தியில் வளர ஆரம்பித்தர்கள். 16 ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்திலிருந்து குருக்கள் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிறிஸ்துவ மக்களுக்கு தொடக்கத்தில் போர்துகீசிய பிரான்சிஸ்கன் சபை துறவிகளும், அவர்களைத் தொடர்ந்து இயேசு சபை குருக்களும், அதன்பின் மயிலாப்பூர் மறைமாவட்டத்திலும், அதன்பின் 1952 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மறைமாவட்டத்திலும் அதன்பின் பட்டுக்கோட்டை பங்கிலிருந்த கப்புச்சின் குருக்கள் கிறிஸ்துவ விசுவாசத்தையும் புனித அந்தோணியாரின் பக்தி முயற்சியையும் இப்பகுதிகளில் பரப்பினார்கள். எனவே பக்தர்கள் தொகையும் வளர ஆரம்பித்தது.
தற்போது உள்ள கோவிலின் தோற்றம்:
புனித அந்தோணியார் வழியாக இறைவன் செய்த புதுமையினால் அவரை தரிசிக்க வந்த மக்கள் கொடுத்த காணிக்கைகளைக் கொண்டு கிராமத்தார்கள் தங்களது உழைப்பையும் கொடுத்து ஆலமரத்திற்கு வடக்கே ஒரு கோயிலேக் கட்டினார்கள். அங்கே பதுவை புனித அந்தோணியாரின் சுரூபத்தை இக்கோயிலில் வைத்து வழிபட்டனர். இக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகச் கூறப்படுகிறது. இந்த கோயிலின் நிர்வாகம் முதன் முதலில் சுக்கிரம்பட்டி, வீரக்குறிச்சி கிராமத்தின் மக்கள் பொறுப்பில் இருந்தது.
1973 ஆம் ஆண்டு இந்த நிர்வாகப் பொறுப்பு தஞ்சை ஆயர் மேதகு டாக்டர். ஆ. ஆரோக்கியசாமி சுந்தரம் ஆண்டகை வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பட்டுக்கோட்டை பகுத்தந்தையாக இருந்த கப்புச்சின் சபை அருட்திரு. கிளாரன்ஸ் அடிகளார் இந்த நிர்வாகத்தை ஏற்று நடத்திவந்தார். அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு பழைய கோயிலுக்குப் பின்புறம் உள்ள புதுக்கோவில் கட்டப்பட்டது. பின்னர் 1988 ஆம் ஆண்டு சுக்கிரம்பட்டி, வீரக்குறிச்சி கிராமும், நிர்வாகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்ட சஞ்சாய நகர் பங்குத்தந்தை அருட்திரு. ப. குழந்தைராஜ் அடிகளாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1993 - இல் மேமிகு பேராயர் பாக்கியம் ஆரோக்கியசாமி அவர்களின் அனுமதியுடனும், நிதியுதவியுடனும் வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலய கட்டிடப்பணி தொடங்கப்பட்டது.
பின் அருட்தந்தை ஜான் ஜோசப் சுந்தரம் அடிகளாரின் அயராத உழைப்பினால் உயர்ந்த கோபுரங்களைக் கொண்டு 130 அடி நீளமும், 33 அடி அகலமும் கொண்ட வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு 03.12.1996 - இல் தஞ்சை மேதகு ஆயர் பாக்கியம் ஆரோக்கியசாமி ஆண்டகை அவர்களால் புனிதம் செய்து திறந்துவைக்கப்பட்டது.
அவருக்குப்பின் அருத்தந்தை அருளானந்தம் காலத்தின் 2005 இல் வீரக்குறிச்சி - சுக்கிரம்பட்டி மறைப்பணி பங்குத்தலமாக மேதகு தஞ்சை ஆயர் டாக்டர் M . தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் பிரிக்கப்பட்டது. அருட்தந்தை j . j . பிரிட்டோ பங்குத்தளத்தின் முதல் நிர்வாகக் குருவாக பணிபொறுப்பெடுத்தார். அவருடைய காலத்தில் பழைய அந்தோணியார் பீடம் புதுப்பிக்கப்பட்டது, சிலுவைப்பதையும், புனித அந்தோணியாரின் கருவூல மண்டபமும் கட்டப்பட்டது பங்கு மக்களையும், புனித அந்தோணியார் பக்தர்களையும் ஆன்மீக வழியில் சிறப்பாக வழிநடத்தினார். அவருக்குப்பின் 2010 இல் வெண்கலத்தால் ஆனா கொடிமரம் புதிதாக அருட்தந்தை நித்திய சகாயராஜ் அவர்களால் கட்டப்பட்டது.
வீரக்குறிச்சி - சுக்கிரம்பட்டி பங்கு 2013 இல் தனிப் பங்காக மேதகு தஞ்சை ஆயர் டாக்டர் M . தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் உயர்த்தினார்கள்.
2016 ஆம் ஆண்டு அருட்தந்தை A. கிறிஸ்து அமலதாஸ் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தபின் புனித அந்தோணியாரின் பொன்பீடம் கட்டப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று மேதகு தஞ்சை ஆயர் டாக்டர் M. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டது.
பொன்பீடம்
ஒளிச்சுடராய் வீசும் பொன்பீடத்தில் அழகு பழங்கால கட்டிடக்கலை அம்சங்களோடு கட்டப்பட்டு அதன் நடுவே அற்புதம் புரியும் புனித அந்தோணியாரின் அருளிக்கம் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மூன்று பக்கங்களும் அழகு வேலைப்பாடுகளோடு அதன் நடுவே நற்கருணை கதிர்ப்பாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது.
புனித அந்தோணியார் சுரூபம்
இப்பொன்பீடத்தின் நடுவே அமைந்துள்ள புனித அந்தோணியார் சுரூபம் மற்ற அந்தோணியாரின் சுரூபத்தைவிட வித்யாசமாக ஒரு கையில் விவிலியமும், மறு கையில் இயேசுவின் திருச்சிலுவையையும் தாங்கி நிற்பதும், இறைவார்த்தை வாசியுங்கள், நம்புங்கள், இறையரசுக்கு வாருங்கள் என்றும், தீய வினைகள், தீயசக்திகளை திருச்சிலுவையின் வழியாக விரட்டுவது போலவும் இப்புதுமை புனித அந்தோணியார் சுரூபம் உள்ளது.